டில்லி
கடந்த ஹோலி அன்று மாலை ஒரு கும்பலால் ஒரு இஸ்லாமிய குடும்பம் தாக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்ற வாரம் வட இந்தியாவில் ஹோலிப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வட இந்தியாவில் ஹோலி என்பதே ஒரு மகிழ்வான பண்டிகையாகும். மக்கள் அனைவரும் ஒருவர் மிது ஒருவர் வண்ணங்களை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர். குர்காம் நகரில் அந்த மகிழ்ச்சியை குலைக்கும் வகையில் ஒரு வருந்தத்தக்க சம்பவம் நடந்துள்ளது.
ஹோலிப் பண்டிகை அன்று மாலை வேளையில் குருகிராம் நகரில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் தங்கள் இல்லத்தின் வாசலில் கிரிக்கெட் விளையடிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவர்கள் விளையாட்டை தடுத்துள்ளது. சுமார் 25 பேர் கொண்ட அந்த கும்பலில் இருந்தவர்கள் அவர்களை பாகிஸ்தான் சென்று விளையாடுமாறு சொல்லி உள்ளனர்.
அப்போது தகராறு முற்றவே அந்த கும்பலில் உள்ளவர்கள் அந்த இஸ்லாமியரின் வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தினரை அடித்து நொறுக்கி உள்ளனர். அத்துடன் ஹோலியை முன்னிட்டு அவர்கள் இல்லத்துக்கு வந்த விருந்தாளிகளும் தாக்கப்பட்டுள்ளனர். இதை ஒட்டி மகேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
இஸ்லாமிய குடும்பத்தினர் மீது நடந்த தாக்குதல் வீடியோ எடுக்கப்பட்டு வலை தளங்களில் வைரலானது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “ஒவ்வொரு தேசபக்தி கொண்ட இந்தியரும் குருகிராம் நகரில் நடந்த இஸ்லாமிய குடும்பம் தாக்குதல் விடியோவைக் கண்டு அவமானம் கொள்ள வேண்டும். ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக வெறுப்பு அரசியலையும் மதவெறியையும் பரப்பி வருகிறது. சமுதாயத்தின் இருண்ட பக்கத்தையும் நடைபெற உள்ள அபாயகரமான பின் விளைவுகளையும் இந்த பதிவு நமத்து சுட்டி காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.