கோவை அன்னப்பூர்ணா உணவக உரிமையாளரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்த விவகாரத்திற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பை எளிமைப்படுத்த வேண்டும் என்ற சிறு வணிகர்களின் கோரிக்கையை ஏற்க மனமில்லாத திமிர் பிடித்த அரசு என்றும் சாடியுள்ளார்.

ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்துரையாட தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த புதனன்று (செப். 11) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கோவை ஸ்ரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர்
ஒரே மாவில் ஒரே மாஸ்டர் தயார் செய்யும் வெவ்வேறு வகையான உணவுகளுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதும் குறித்தும் இதனால் வணிகர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் பேசினார்.

அவரது இந்த பேச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக வைரலானதை அடுத்து ஜிஎஸ்டி குளறுபடி குறித்து மத்திய நிதி அமைச்சரிடம் ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து நிர்மலா சீதாராமன் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைக்கப்பட்ட அந்த உணவக உரிமையாளர் சீனிவாசன் கூட்டத்தில் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

இதனால், அந்த உணவக உரிமையாளர் பாஜகவினரால் மிரட்டப்பட்டதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் “கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த கோரிக்கை வைத்ததால் மக்கள் பிரதிநிதியால் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற அல்லது தேசிய சொத்துக்களைப் பெற முற்படும்போது, ​​மோடி சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்.

https://x.com/RahulGandhi/status/1834484873458852244

பணமதிப்பு நீக்கம், அணுக முடியாத வங்கி முறை, வரி மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் அகந்தையால் அவர்கள் அவமானப் படுத்தப்படுகிறார்கள்.

MSMEகள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம் மக்கள் சொல்வதைக் கேட்டால், ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும், ஆனால் அதை புரிந்து கொள்ள அவர்களின் ஈகோ தடுக்கிறது” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி குளறுபடி – பாஜக எம்.எல்.ஏ. அலப்பறை குறித்து புட்டு புட்டு வைத்த கோவை உணவக உரிமையாளர் நிதி அமைச்சரிடம் மன்னிப்பு… மிரட்டப்பட்டாரா ?