டில்லி

மாநிலங்களவையில் நிறைவேறி உள்ள தொழிலாளர் துறை சார்ந்த மசோதாவுக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாநிலங்களவையில் தொழிலாளர் துறை சார்பில் 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.   ஏற்கனவே இதே முறையில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி தற்போது 350 மற்றும் அதற்குக் குறைவான தொழிலாளர்கள் உள்ள நிறுவனம் மூடப்படும் போது அரசு அனுமதி பெறத் தேவை இல்லை என உள்ளது  இதற்கு முன்பு 100 தொழிலாளர்கள் மற்றும் அதற்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களை மூட அரசு அனுமதி தேவை இல்லை என இருந்தது.  இந்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேறி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “மத்திய அரசால் முதலில் விவசாயிகள் குறி வைக்கப்பட்டனர்.  அதற்கு அடுத்தபடியாக தொழிலாளர்கள் குறி வைக்கப்பட்டுளன்ர்.  இந்த அரசு ஏழைகளைச் சுரண்டி தனது நண்பர்களை வளர்க்கின்றனர்.  இதுவே மோடியின் ஆட்சி” எனப் பதிவிட்டு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில், “தற்போதைய கடினமான நேரத்தில் ஒவ்வொரு தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.  பாஜக அரசைப் பாருங்கள், தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்குவதை எளிதாக்கும் சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.  இதன் மூலம் மத்திய அரசு அட்டூழியங்கள் செய்வதை எளிதாக்கி உள்ளது” எனப் பதிந்துள்ளார்.