டில்லி

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் இடைத் தரகருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட செய்தி வெளியானதை ஒட்டி மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் இடப்பட்டது.   இந்த ஒப்பந்தத்தில் ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசு நிர்ணயம் செய்திருந்த விலையை விட அதிக விலைக்கு வாங்க உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.  உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2019 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் ரஃபேல் ஊழல் குறித்து காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவில் பிரசாரம் செய்தது.   உச்சநீதிமன்றம் ரஃபேல் ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடும் இல்லை எனத் தள்ளுபடி செய்தது.  இந்த தீர்ப்பை சுட்டிக் காட்டி பாஜகவினர் தாங்கள் குற்றமற்றவர்கள் என தங்களைத் தாங்களே புகழ்ந்து வந்தனர்.

நேற்று முன் தினம் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் இடைத் தரகருக்கு ரூ.9.5 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்தியை வெளியிட்டது.  இதை பாஜக மறுத்த போதிலும் மக்களிடையேயும் எதிர்க்கட்சிகள் இடையேயும் இந்த ரஃபேல் விவகாரம் மீண்டும் புதிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டரில் ரஃபேல் ஒப்பந்தத்தில் இடைத் தரகருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட செய்தி வெளியானதைக் குறிப்பிட்டு, “ஒருவரின் நடவடிக்கைகளுக்குப் பற்று வரவைக் குறிக்கும் கணக்குப் புத்தகம் கர்மா ஆகும்.  அந்த கர்மாவில் இருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது” என விமர்சித்துள்ளார்.