லக்னோ: பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோரை சந்திக்கும் வகையில், அவர்களது சொந்தா ஊரான ஹத்ராஸ் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு உ.பி. மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை காங்கிரஸ் முதன்மை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா உறுதிப்படுத்தி உள்ளார்.
உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முன்பு கூட்டு பாலியல் தாக்குதல் மூலம் 19 வயது தலித் பெண் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஹத்ராஸ் செல்ல முயன்றனர். அவர்களை உ.பி. மாநில எல்லையில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்கள் நடந்துசெல்ல முயன்றபோது, யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வலுக்கட்டாயமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுல்லுவில் ராகுல்காந்தி சாலையில் விழுந்தார். இதையடுத்து, யோகி அரசின் நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூற இன்றும் மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார். அவருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பேருந்தில் ஹத்ராஸுக்கு புறப்பட்டுள்ளனர். வாகனத்தை பிரியங்கா இயக்க அவருடன் ராகுல்காந்தி பயணம் செய்தார். இந்த வாகனம் பிற்பகல் உ.பி. மாநில எல்லை வந்தபோது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே, உ.பி எல்லையில் ஆயிரக் கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளனர். அதுபோல பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, காவல்துறையினர் ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு ஹத்ராஸ் செல்ல அனுமதி வழங்கி உள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பான ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஏசிஎஸ் அவனிஷ் அவஸ்தி, ராகுல், பிரியங்காவுடன் மேலும் 3 பேர் இணைந்து மொத்தம் 5 பேர் ஹத்ராஸ் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை சந்திக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.
உ.பி. எல்லையில் ராகுல் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டு, காவல்துறையினரால், அவர் தள்ளிவிடப்பட்டு, தாக்கப்பட்டதும் காங்கிரஸ் தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. உ.பி. மாநில அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைளை எதிர்த்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். உ.பி.யிலும் தொடர் போராட்டம் நடைபெற்றது. மேலும், பாஜக தலைமை உள்பட பெண் தலைவர்களும் யோகி அரசின் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளனர்.
இதையடுத்து, யோகி தலைமையிலான மாநில பாஜக அரசு பணிந்துள்ளது. இன்று ராகுல், பிரியங்கா ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க அனுமதி வழங்கி உள்ளது.