ரேபரேலி
ராகுல் காந்தி தனது திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய தொண்டர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் தனது வேட்புமனுவுக்கு பிறகு முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தனது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியை மேடையின் முன் அழைத்தார்.
பிறகு ராகுல் காந்தி, “நான் தேர்தலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன், எனது சகோதரி இங்கே நேரத்தை செலவிடுகிறார். இதற்காக அவருக்கு ஒரு பெரிய நன்றி” என்று கூறினார்.
அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் திருமணம் எப்போது? எனத் தொண்டர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்குமாறு பிரியங்கா காந்தி கூறினார். ராகுல்காந்தி நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி கடந்த ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடியபோது, ஒரு மாணவர் “புத்திசாலியாகவும் அழகாகவும் இருந்த போதிலும் திருமணத்தை ஏன் கருத்தில் கொள்ளவில்லை” என்று கேட்டதற்கு அவர், ‘தனது பணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், தான் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், திருமணத்திற்கு இடமளிக்கவில்லை’ என்று பதில் அளித்திருந்தார்.