டெல்லி
மோடி உக்ரைன் போரை நிறுத்தியதாக சொல்லப்படும் போது அவர் ஏன் நீட் வினாத்தால் லீக்கை நிறுத்தவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மே 5 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் லீக் ஆனதாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால், இதை தேசிய தேர்வு முகமை) மறுத்தது.
இம்மாத தொடக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1, 563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றம் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு 23-ம் தேதி மறு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ராகுல் காந்தி அப்போது செய்தியாளர்களிடம்,
“நீட் தேர்வை தொடர்ந்து யுஜிசி நெட் தேர்விலும் வினாதாள் கசிவு ஏற்பட்டது. அவை கண்டுபிடிக்கப்பட்டதால் தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது எனது பாரத் ஜாடோ யாத்திரையின் 2-வது பயணத்தின் போது, ராஜஸ்தான் மாநிலம் வழியாக நான் சென்ற போது சில மாணவர்கள் நீட் போன்ற பல தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக என்னிடம் தெரிவித்தனர்.
இது போன்ற முறை கேட்டால் மாணவர்கள் மிகவும் பாதிக்கின்றனர். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இது அதிகம் நடைபெறுகிறது. கடந்த 7 வருடங்களில் 70க்கும் மேற்பட்ட முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது. 2 கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவோம். ரஷ்யா-உக்ரைன் போரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து வினாத்தாள் கசிவு ஏற்படுகிறது. ஆனால் சில காரணங்களால் பிரதமர் மோடியால் அதனை நிறுத்த முடியவில்லை அல்லது அவர் நிறுத்த விரும்பவில்லை.
இந்தியாவில் தேர்வு வினாத்தாள் கசிவை நிறுத்துங்கள். பிரதமர் நரேந்திர மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்த முறை தனி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க முடியாததால் அவர் குழம்பி போய் இருக்கிறார்.”
என்று தெரிவித்துள்ளார்,