யநாடு

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களாகவே கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழை கடந்த வாரத்திலிருந்து தீவிரமடைந்தது. இதனால் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி கேரளாவில் கனமழை பெய்தது.

தொடர்ந்து பெய்த கனமழையால் வயநாட்டின் முண்டகை மற்றும் சூரல்மாலாவில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது. தற்போது வரை கிட்டதட்ட 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் முதல் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று வயநாட்டிற்கு சென்றார். அங்கு நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.மேலும்,நிலச்சரிவில் குடும்பத்தினரை இழந்து தவிப்பவர்களையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இருவரும் மீட்புக் குழுவினரிடம் மீட்புப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தனர். மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கும், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கும் ராகுல் காந்தி சென்றார். அங்கு நிலச்சரிவில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இது குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் உருக்கத்துடன்,

“இப்போது அரசியல் குறித்து பேச சரியான நேரம் இல்லை, நாம் இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பதே மிகவும் அவசியமானதாகும், இங்கு பல குழந்தைகல் தந்தை, தாயை மட்டுமின்றி அனைத்து குடும்பத்தினரையும் இழந்துள்ளனர்.   நான் என் தந்தை இறந்த போது எவ்வளவு துயரடைந்தேனோ அதே துக்கத்தை இப்போதும் அடைந்துள்ளேன்”

எனக் கூறியது அனைவருடைய கணகளிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது.