ரகுராம் ராஜனுடன் கருத்து வேறுபாடா ? ஜெட்லியின் பதிலை அறிந்துக்கொள்ள தொடந்து படியுங்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பிடித்து நிதி அமைச்சராக உள்ளவர் அருண் ஜெட்லி.
நரேந்திர மோடி அரசின் நிதிக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவர் ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன்.
இவர்கள் இருவருக்குமிடையே சச்சரவு நிலவுவதாக தகவல்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன.
நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜனுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கி அலுவலகமும் ஒருமித்த கருத்துடன் செயல்படவில்லையென வெளியான தகவல்கள் உண்மையில்லை யெனவும், இம்மாதிரியான தகவல்களுக்கு காரணம் கட்டுக்கதைக்கு நாட்டம் மிகுந்த நாட்டின் பொதுக்குணம் தான் எனக் குற்றம்சாட்டினார்.
எனக்கு ரகுராம் ராஜனுடன் தொழில்முறையிலான சுமூக உறவு உள்ளது. இந்தியர்களுக்கு புரளிபேசுவதில் மோகம் அதிகம். நிதியமைச்சகமோ, ரிசர்வ் வங்கியோ ,இரண்டும் பொறுப்புமிக்க கழகங்கள். இரண்டு இடங்களிலும் தங்களின் முக்கியப்பணிகளை நன்குணர்ந்த, போதிய பக்குவமிக்க தலைமைகள் பலர் உள்ளனர்” எனவும் கூறினார்.
எனினும் செப்டெம்பர் மூன்றாம் தேதியன்று பணி ஓய்வு பெறும் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு தருவது குறித்தக் கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார். ரகுராம் ராஜனின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா எனும் கேள்விக்கு, அருண் ஜெட்லி “இது குறித்து கருத்து தெரிவிப்பது தகுந்த செயலில்லை” என பதிலளித்தார்.
இதன்மூலம், ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜனுக்கு பதவிக்காலம் நீட்டிப்புக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது புலப்படுகின்றது.