தாவண்கரே
எடியூரப்பாவின் மகனும், தற்போதைய எம் எல் ஏயுமான ராகவேந்திராவின் காரி மோதி பாதசாரி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
பா ஜ க வின் கர்னாடக தலைவர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா. இவர் ஷிகாரிபுரா தொகுதியின் தற்போதைய எம் எல் ஏ ஆவார். தாவண்கரே அருகில் உள்ள நியாமதி அருகே தனது சொகுசுக்காரில் நேற்று இரவு இவர் பயணம் செய்துக் கொண்டிருந்தார். டிரைவர் ரவீந்திரா காரை ஓட்டி வந்தார். தாவண்கரேயில் இருந்து ஷிமோகா நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது மாதபூரா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 24) என்பவர் ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து இறங்கி சாலையைக் கடந்துள்ளார். வேகமாக அப்போது வந்த ராகவேந்திராவின் கார் அவர் மேல் மோதி சுரேஷ் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். ஒரு பாதசாரி சாலையைக் கடப்பதை கவனிக்காமல் வேகத்தை குறைக்காமல் அவர் மேல் அந்த கார் ஓட்டுனர் மோதி விட்டு நிறுத்தாமல் சென்று விட்டதாக இதை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
சம்பவத்தை பார்த்த ஒருவர், “எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவின் கார் ஓட்டுனர் வேகத்தை குறைக்காமல் அந்த பாதசாரி மேல் மோதினார். உள்ளே ராகவேந்திராவும் அமர்ந்திருந்த செய்தி அறிந்து நூற்றுக்கணக்கில் கூட்டம் கூடி விட்டது. அடிபட்ட சுரேஷ் தலையிலும் கால்களிலும் காயமுற்று இரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஆனால் அவர் உயிர் கார் மோதியதுமே பிரிந்து விட்டது என்பது மருத்துவர்கள் சொன்ன பின் தான் எங்களுக்கு தெரிந்தது” என கூறி உள்ளார்.
இரவு சுமார் 8.40 மணிக்கு அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் காவலர்கள் விரைந்தனர். முன்னாள் முதல்வர் ரேணுகாச்சாரியாவும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து விவரங்களை கேட்டறிந்துள்ளார்.
ஓட்டுனர் ரவீந்திராவை நியாமதி போலீசார் கைது செய்துள்ளனர். விபத்தை பார்த்தவர்களிடமும், காரில் இருந்த ராகவேந்திராவிடமும் விசாரணை நடந்து வருகிறது. சுரேஷின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு கட்சித் தலைவரின் மகனும், சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள ஒருவர் சென்ற வாகனத்தின் மூலம் பாதசாரி ஒருவர் பரிதாப மரணம் அடைந்ததற்கு மக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.