டெல்லி:
ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் முறைகேடு மற்றும் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு வழக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மீதான சவுகிதார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.
இந்த வழக்குகளை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது. வழக்குகளின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ந்தேதியுடன் ஓய்வுபெற உள்ள நிலை யில், அவர் தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்த முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் கடந்த 9ந்தேதி (09-11-2019) தீர்ப்பு வழங்கப்பட்டு விட்ட நிலையில், இன்று (13-11-2019) கர்நாடக தகுதி நீக்கம் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதைதொடர்ந்து மேலும் 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
ரஃபேல் வழக்கு:
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதில் மாபெரும் ஊழல் நடத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட பாஜக மூத்த தலைவர்களான யஷ்வந்த்சின்கா உள்பட பலர் குற்றம் சாட்டினர்.
நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான போர் விமானங்களை கொள்முதல் செய்வதில், அரசின் கொள்கையை மீறி இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாகவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உச்சநீதி மன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அமர்ர்வு விசாரணை நடத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படுவதாக உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.
சபரிமலை வழக்கு
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு (2018) செப்டம்பர் 28ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இது கேரளா மட்டுமின்றி இந்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பந்தளம் ராஜ குடும்பத்தினர், முதன்மை தந்திரி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, தேசிய ஐயப்ப பக்தர்கள் அமைப்பு சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் உள் 48 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.
ராகுல்காந்தி மீதான சவுகிதார் வழக்கு
ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில், பிரதமர் மோடியை சவுகிதார் என்று உச்சநீதி மன்றமே தெரிவித்து உள்ளதாக ராகுல் காந்தி பேசியதை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.
ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த தேவையில்லை’ என்று கூறிவிட்டது. ஆனால், ஊடகங்களில் ராணுவத் துறையின் சில ரகசிய ஆவணங்கள் கசிந்து, மீண்டும் ரஃபேல் விவகாரம் குறித்த வழக்கை விசாரணை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தது.
உச்சநீதி மன்றத்தின் இந்த முடிவை சுட்டிக்காட்டி, அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, ‘சவுகிதார் ஒரு திருடன் என்பதை நீதிமன்றமே ஒப்புக் கொண்டு விட்டது’ என்றார். ராகுலின் இந்த கருத்துக்கு எதிராக பாஜக தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் தரப்பு வழக்கறிஞர், ‘எனது கட்சிக்காரர் தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறார்’ என்றார். இதற்கு பாஜக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘வருத்தம் தெரிவிப்பது மன்னிப்பு கேட்பதற்குச் சமமாகாது. ஒரு தவறு செய்தால், அதற்கு முழுமையான நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும் கூறியது. இந்த வழக்கிலும் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கிலும் நாளை தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமான 3 வழக்குகளில் நாளை உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.