ஸ்ரீநகர்

ம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது வரவேற்க தக்கது என காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டு, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இது தொடர்பான மசோதா நேற்று இரு அவை களிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், காஷ்மீரில்  மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதங்கள் மக்களவையில் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், சில காங்கிரஸ் தலைவர்கள் மத்தியஅரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவரும், சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரு மான ஜனார்த்தன் திரிவேதி மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக தெரிவித்தவர், எனது அரசியல் ஆசான் ராம் மனோகர் லோகியா கூறியபடி  விதி எண் 370 நீக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்ற போது நடந்த தவறு இன்று திருத்தப்பட்டுள்ளது என்று வரவேற்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது வரவேற்க தக்கது என உ.பி. மாநிலம் ரேபேரலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,  மத்திய அரசின் இந்த முடிவுக்கு நான் முழுமையாக ஆதரவு தருகிறேன். இது ஜம்மு- காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்க உதவும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. அதை அரசியலாக்கக்கூடாது. ஒரு எம்.எல்.ஏ என்ற முறையில் இதை வரவேற்கிறேன்னத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைக்கு எதிராக மாற்றுக்கருத்துக்களை கூறி வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.