டில்லி
தலைநகர் டில்லியில் காற்று மாசுபாட்டை தவிர்க்க வைக்கோல் எரிப்பை நிறுத்தும் செலவாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
டில்லியில் காற்று மாசு அதிகமாகி மூச்சு விடவே மக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து டில்லி அரசும் எந்த ஒரு நடவடிக்கையும் சரிவர எடுக்கவில்லை என மக்கள் குறை கூறி வருகின்றனர். டில்லியின் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமப் புற விளை நிலையங்களில் உள்ள வைக்கோல் போன்ற விவசாயக் கழிவுகள் எரிப்பதானால் உண்டாகும் புகையும் இதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.
இந்த மாசு குறித்த ஒரு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதனை தெரிவித்துள்ளனர். மேலும் அந்த விவசாயிகளுக்கு வைக்கோல் மற்றும் விவசாய கழிவுகளை எரிக்காமல் அகற்ற தேவையான உபகரணங்கள் வாங்க மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
தற்போது வைக்கோலை எரிக்காமல் அகற்ற இயந்திரம் உள்ளது. அந்த இயந்திரத்தில் வைக்கோலை சிறு சிறு துண்டுகளாக்கி அவற்றை கோதுமையுடன் சேர்ந்து நிலத்தில் விதைக்க உள்ளனர். இதன் மூலம் விதைகளை தனியாக விதைக்கும் வேலை மிச்சமாகும். அத்துடன் இந்த வைக்கோல் மக்கும் வரை நிலத்தில் பனியின் தாக்குதல் அதிகம் இருக்காமலும், விதைகளை பனியில் இருந்து காப்பாற்றும் அரணாகவும் அமையும்
இந்த இயந்திரங்களை வாங்கவும் அவைகளை உபயோகப் படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும் வரும் வரவு செலவு நிதி ஒதுக்கீட்டில் பணம் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழு ஆராய்ந்து ஒரு அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அந்த அறிக்கையின் சிபாரிசுப்படி மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி இதற்காக ஒதுக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.