லண்டன்: கொரோனா வைரஸ் எனும் கொடிய சவாலை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றுள்ளார் பிரிட்டன் அரசி எலிசபெத்.

தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அரசி எலிசபெத் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆனால், லண்டன் செய்தி நிறுவனம் அவரது பேச்சை முன்கூட்டியே வெளியிட்டுவிட்டது. இந்த உரை இன்று இரவு 8 மணிக்கு(ஏப்ரல் 5) நாட்டு மக்களுக்கு ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது உரையில் அரசி எலிசபெத் கூறியுள்ளதாவது; தற்போது நாட்டிற்கு ஒரு துயரம் மிகுந்த சவாலான நேரமிது என்பதை நான் அறிவேன். இந்தப் பெரும் சவாலை நமது மக்கள் எதிர்கொண்ட விதத்தை எண்ணி எல்லோரும் பெருமிதம் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த நேரத்தில் முன்னனியில் நிற்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை நான் பாராட்டுகிறேன்.

மேலும், இந்தத் தலைமுறையின் பிரிட்டன் மக்கள் எதனையும் சமாளிக்கும் வலிமை உடையவர்கள் என்று அடுத்துவரும் எதிர்கால சந்ததியினரும் கூறுவார்கள். சுய ஒழுக்கம், நற்பண்புகள், அமைதியான நல்லெண்ணம், சமூகத்தினரின் பண்புகள் ஆகியவை இந்த நாட்டை மேலும் வலுப்படுத்துகின்றன.

இந்த துயரமான சூழலில், எதிர்பாராத பல இக்கட்டுகள் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளன. எனவே, இந்த இன்னலை அனைவரும் ஒன்றுபட்டு வெற்றி பெறுவோம் என்றுள்ளார் இரண்டாம் எலிசபெத்.