லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து புறப்பட் காண்டாஸ் விமானம் 2 சூரிய உதயங்களுடன், 19 மணி நேரத்தை கடந்து, சிட்னி வந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.


தொலைதூரத்துக்கு எவ்வித நிறுத்தங்களும் இல்லாமல் விமான சேவையை அளிக்கும் வகையில், காண்டாஸ் என்ற ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது. அதன்படி, கடந்த மாதம் நியூயார்க்கில் இருந்து சிட்னிக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது.
அந் நிறுவனத்தின் இந்த விமான சேவை பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு இடையில்லா விமான சேவையை அளிக்க முடிவு செய்தது.
அதன்படி, லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து காண்டஸ் விமானம், வியாழக்கிழமை காலை 52 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பயண தொலைவு 17,800 கிலோ மீட்டராகும்.


கிட்டத்தட்ட 19 மணி நேரம் 19 நிமிடங்கள் பயணித்த அந்த விமானம், மறுநாள் வெள்ளி நண்பகல் திட்டமிட்டபடி 12.30 மணியளவில் சிட்னி நகரை வந்தடைந்தது. நீண்ட நேரம் பயணம் என்பதால் பயணிகளுக்கு சிறப்பு பயிற்சிகள், நடைபயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த விமான பயணத்தில் ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. அதாவது, 2 முறை சூரிய உதயத்தை இந்த விமானத்தில் செல்பவர்கள் பார்க்கலாம். ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிட்னி வந்த போது 2 சூரிய உதயத்தை பயணத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காண்டாஸ் விமான நிறுவனம், இந்த பயணத்தை நிச்சயம் பயணிகள் விரும்புவார்கள். வருங்காலங்களில் பயணத்தின் போது ஏதேனும் அசவுகரியங்கள் இல்லாத அளவுக்கு சில பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படும் என்று கூறி இருக்கிறது.
இந்த விமான சேவை வெற்றிகரமானதால், அடுத்தபடியே, ஆஸ்திரேலியாவின் சிட்னி, பிரிஸ்பேன் நகரங்களில் இருந்து லண்டன், நியூயார்க் நகரங்களுக்கு விமானங்களை இயக்க காண்டாஸ் நிறுவனம் முடிவு செய்து, அதனை அறிவித்து இருக்கிறது.