தாவரங்கள் மட்டுமன்றி ஓடுவது, பறப்பது என பல உயிரினங்களை உலகின் பல்வேறு நாட்டில் உள்ள மக்கள் விருப்பமாக சாப்பிடும் போதும் ஊர்வனவற்றை வெகு சிலரே விரும்புகின்றனர்.

ஆனால், தாய்லாந்து நாட்டில் ஆயிரக்கணக்கான மலைப்பாம்புகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

 

மத்திய தாய்லாந்தில் உள்ள பண்ணைகளில் அதிகளவு வளர்க்கப்படும் இந்த மலைப்பாம்புகள் ஒரு சிறிய காண்ணாடி கூண்டுக்குள் சுருண்டுபடுத்திருப்பதோடு அதன் அருகே செல்லும் போது கண்ணாடியை ஆக்ரோஷமாக தாக்கி புதியவர்களுக்கு திகிலையும் ஏற்படுத்துகிறது.

காலம் காலமாக தாவர உணவு வகைகளையும் கால்நடைகளை மட்டுமே உண்டு பழகிய மக்கள் தற்போது மலைப்பாம்பு மாமிசத்தில் அதிக புரதச் சத்து இருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து அதன் மீது நாட்டம் கொண்டு வருகின்றனர்.

பெல்ட்கள், பைகள், கைப்பைகள் உள்ளிட்ட பல்வேறு தோல் பொருட்களுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டு வந்த மலைப்பாம்புகள் இப்போது மாமிசத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது.

பாம்புகள் அதிக வெப்பநிலை மற்றும் வறட்சியை பொறுத்துக்கொள்ளும், விரைவாக இனப்பெருக்கம் செய்யும், தவிர விலங்கு புரதத்திற்காக பாரம்பரியமாக வளர்க்கப்படும் மற்ற உயிரினங்களை விட குறைவான உணவை உட்கொண்டு மிக வேகமாக வளரக்கூடியது.

சீனா மற்றும் வியட்நாமில் மட்டும் குறைந்தது 4,000 மலைப்பாம்பு பண்ணைகள் உள்ளன.

வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் உள்ள இரண்டு வணிக பண்ணைகளில் கிட்டத்தட்ட 5,000 ரெட்டிகுலேட்டட் பர்மிய மலைப்பாம்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் மலைப்பாம்பு இறைச்சியில் அதிக புரதச் சத்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

உணவு மற்றும் தண்ணீரின்றி மாதக்கணக்கில் உயிர்வாழக்கூடிய இந்த வகைப் பாம்புகளுக்கு கோழி கழிவு மற்றும் காட்டில் இறந்து கிடைக்கும் விலங்கினங்களின் மாமிசம் தவிர மாட்டிறைச்சி போன்றவை தீவனமாக வழங்கப்படுகிறது.

பெண் மலைப்பாம்புகள் ஆண்டுதோறும் 50 முதல் 100 முட்டைகள் வரை இடுவதால், அவை விரைவாக இனப்பெருக்கம் செய்கின்றன.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மையைப் போக்க மலைப்பாம்பு வளர்ப்பு ஒரு நெகிழ்வான மற்றும் திறமையான பதிலாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.