உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா – உக்ரைன் இடையே இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என்று ரஷ்ய அதிபர் புடின் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இந்தியா இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்ற நிலையில் இதனை இந்தியா ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மூன்றாண்டுகளாக நீடித்து வரும் நிலையில் போருக்குப் பின் முதல்முறையாக ஜூலை மாதம் பிரதமர் மோடி ரஷ்யா சென்றார்.

பிரதமர் மோடியின் இந்த பயணத்துக்கு அமெரிக்கா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததது.

இதனையடுத்து அடுத்தமாதமே அதாவது ஆகஸ்ட் மாதத்தில் உக்ரைன் நாட்டிற்கும் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலின்ஸ்கியை சந்தித்து நலம் விசாரித்து திரும்பினார்.

இதைத் தொடர்ந்து இதுவரை இந்திய பிரதமர்கள் யாரும் செல்லாத கிழக்கு ஆசியாவில் உள்ள குட்டி தீவு நாடான ப்ருனே சென்ற பிரதமர் மோடி இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.

தவிர, சிங்கப்பூரிலும் இறங்கி அந்நாட்டு அதிபருடனும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளார்.

இதற்கு நடுவே, ரூ. 1.44 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்களை வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து திரும்பியிருக்கிறார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

சீன எல்லை, பாகிஸ்தான் எல்லை பதற்றங்களை தவிர அண்டை நாடான பங்களாதேஷில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை ஆகிய காரணங்களைக் கொண்டும் அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாகவும் புடினின் இந்த அழைப்பை இந்தியா ஏற்குமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர பலதரப்பு மத்தியஸ்தத்தை ரஷ்யா தற்போது முன்னெடுத்துள்ள நிலையில் அடுத்த மாதம் ரஷ்யாவின் கசன் நகரில் தொடங்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய கலந்து கொள்ள இருக்கும் நிலையில் இந்தியாவின் முடிவை உலக அரங்கில் அனைத்து நாடுகளும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் : புதின்