சென்னை: தவெக அரசை புஷ்பா அரசு என்று ஏளனம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் புஷ்பா பாணியில் செயல்படுவதாக விமர்சித்த நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுத்து விஜய் பதிவிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், அதற்கான தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு தலைவர்களை விஜய் சென்று சந்தித்ததை விமர்சிக்கும் விதமாக, புஷ்பா பட பாணியில், அதாவது சோஃபா கொண்டுசெல்லப்பட்டதை குறிப்பிட்டு பேசினார்.
இதற்கு முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடிகொடுத்துள்ளார். அவரது பதிவில்,, “நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள்.
தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம். இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை.

1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும்.
ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை. மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம். மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர்.
ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங் ளைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம்.
இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான். மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.“ என்று கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசும்போது, “அதிமுக தற்போது பிளவுபட்டுள்ளது. அந்த கட்சியின் ஒரு பிரிவினர் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் பிறகுதான் பல அரசியல் திருப்பங்கள் நடந்தன” என்று கூறினார்.
மேலும், “ஒரு பிரிவை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. அதன் பின்னாலேயே புதிய முதலமைச்சரும் செல்கிறார். புஷ்பா திரைப்பட பாணியில் இந்த ஆட்சி நடைபெறுகிறது” என்று நகைச்சுவை கலந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
அவரது இந்த பேச்சு சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், உறுப்பினர்களிடையே சிரிப்பலையையும் உருவாக்கியது. அரசியல் ஆதரவை பெறுவதற்காக மறைமுக பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் சமரசங்கள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டையும் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். இதற்கு முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.
[youtube-feed feed=1]