கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு ஆதிராவிடர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சத்துணவில் பூரான் (Centipede) கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடம் மற்றும் சத்துணவுக்கான பொருட்கள், தண்ணீர் போன்றவை சுத்தமில்லாமல் இருந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
சிதம்பரம் அருகே உள்ளது வரகூர்பேட்டை கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அங்கு மதிய உணவு சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்களும் வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது மதிய உணவு பாத்திரத்தில் பூரான் ஒன்று கிடந்துள்ளததை மாணவர்கள் கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து அங்கு வந்த ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், யாரும் சாப்பிட வேண்டாம் என தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு லேசான மயக்கமும், தலை சுற்றிலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த உடனே மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆட்டோ , 108 ஆம்புலன்ஸ் மூலமும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
மாணவர்கள் அனைவரும் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் முதலுதவி பெற்றனர். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 24 மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் போலீசார் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வருவாய்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் மாலை அவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் சமைக்கப்பட்ட மதிய உணவில் பூரான் விழுந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சத்துணவுக்கான பொருட்கள், தண்ணீர் போன்றவை முறையான பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம் என்றும் மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.