உறவுகள்கவிதை பகுதி 13

புறக்கணிப்பு

பா. தேவிமயில் குமார்

 

உயிர் பிழைத்தால்

போதுமென

ஓடி வருகிறோம் !

 

உயிர் எனும்

ஒற்றை சொத்தினை

வைத்துக்கொண்டு

வாழ நிற்கிறோம் !

 

பாதுகாப்பின்மையும்,

பயமும்,

பதுங்குக்குழிகளையும்,

பல காலமாய்

பார்த்து விட்டோம் !

 

எங்களை

ஏற்றுக்கொள்ள

ஏனோ,

எல்லோருக்கும்

தயக்கமே !

 

வாழ்க்கையைத் தேடி

வருகிறோம் !

வாசல் கதவுகளை

அடைப்பதேன் ?

 

மதமும், இனமும்

மாறி ! மாறி

முத்தமிடுகிறது தன்

கோரப்பற்களால்

எங்கள் வாழ்க்கையின் மீது !

 

உடைந்த

இதயத்தோடுதான்

ஓடத்தில் ஏறி

ஓடிவருகிறோம் !

 

இடமில்லையென

இன்னோர் முறை

உடைப்பதேன் ?

சுக்கு நூறாக !

 

பறவைகளுக்கு

பூச்சியெனவும்,

விலங்குகளுக்கு

வேதாளமெனவும்

பெயர் வைப்பதில்லையே ?

எங்களை

மட்டும் ஏன்,

“மனிதன்” என்பதற்கு

 பதிலாக

“அகதிகள்” என

அழைக்கிறீர்கள் ?

நாங்களும் மனிதர்களே !

இதுவரை

இழந்ததெல்லாம்

எண்ண முடியவில்லை !

தொலைத்ததெல்லாம்

தேட முடியவில்லை,

இருக்கும்

உயிரை மட்டுமாவது

காப்பாற்றிடவே

கடல் கடக்கிறோம் !

 

பயணங்கள்

நீண்டு கொண்டும்,

பாதைகள்

மறிக்கப்பட்டும்,

பந்தாடப்படுகிறோம்

நாங்கள் !

 

மக்கள் தொகை

பெருக்கத்தையும்,

மக்காச் சோள

தட்டுப்பாட்டையும்,

மதத்தின் பெயரிலான

கட்டுப்பாட்டையும்

காரணமெனக்

காட்டுகிறீர்கள் !

 

மனிதர்களின் உயிரைக்

குடித்துவிட்ட

களைப்பில்

உடன்படிக்கைகள்

ஓய்வு பெற்றன !

எங்கள்

மனங்களையெல்லாம்

வெட்டி வீழ்த்தியக்

களைப்பில்

மனிதத்துவம் பற்றி

மணிக்கணக்கில்

பேசும் மனிதர்களே !

 

பேச்சு தேவையில்லை

எங்களுக்கு,

அஞ்சி ஓடிவரும்

எங்களுக்கு,

தஞ்சமெனத்

தாருங்கள் இருப்பிடத்தை !

உலகநாடுகளே !

சொந்த நாட்டிலிருந்து

துரத்தப்படுவது தான்

துயரத்தின்

உச்சமென

உணர முடியாது

உங்களால் !

 

உப்புக் காற்று

இதயத்தை

அரித்துவிட்டது

இழப்பதற்கு, இனி

எதுவுமில்லை !

 

எங்களை

அகதிகளாகப்

பார்க்க வேண்டாம் !

மனிதர்களாக

மட்டுமாவது

பாருங்கள் !

அப்போதாவது

மனம் திறக்கிறதா ?

என பார்க்கலாம்

 

– உலக அகதிகள்