சண்டிகர்: மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் நடைபெற்றுவரும் தங்களின் போராட்டத்தை வலிமைப்படுத்தும் விதமாக, பஞ்சாப் கிராம சபைகள், தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

தற்போதைய நிலையில், போராடும் விவசாயிகளின் எண்ணிக்கையில் பெரியளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், குடியரசு தின டிராக்டர் பேரணியில், விவசாயிகளின் போர்வையில் சிலரை உள்ளே நுழைத்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களையடுத்து, விவசாயிகளின் மீது தீவிரவாதிகள் என்ற முத்திரையை சிலர் குத்தியுள்ளனர்.

எனவே, பல கிராம சபைகள், போராட்டத்தை வலுப்படுத்தி, தீவிரப்படுத்தும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. அதன்படி, வீட்டுக்கு ஒரு விவசாயி, டெல்லி போராட்டக் களத்திற்கு செல்ல வேண்டும். அங்கே, குறைந்தபட்சம் 1 வாரம் இருக்க வேண்டும். அப்படி போக மறுப்பவர்களுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்படும். அதையும் செலுத்த மறுப்பவர்கள் ஊர் விலக்கம் செய்யப்படுவார்கள்.

அதேசமயம், டெல்லிக்கு சென்று வருகையில், விவசாயிகளின் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைந்தால், அதற்கான செலவுகளை பஞ்சாயத்தே ஏற்றுக்கொள்ளும்.

போராட்டத்தில் பங்கேற்க இயலாதோர் அளிக்கும் ரூ.1500 தொகையானது, போராடும் விவசாயிகளின் நலன்களுக்காக செலவிடப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகெய்ட் பேசிய உணர்ச்சிகர உரைதான், இந்தப் புதிய தீர்மானங்களுக்கு காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.