சண்டிகர்
பஞ்சாப் வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாகக் கூறி காவல்துறை அதிகாரி ஹர்மந்தீப் சிங் ஹன்ஸ் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5ம் தேதி நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி பஞ்சாப் வந்தார். பிரதமரின் வாகனங்கள் சாலை மார்க்கமாக வந்தபோது விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பிரதமர் மோடியின் கார் மேற்கொண்டு செல்ல முடியாமல், பாலம் ஒன்றின் மீது 20 நிமிடங்கள் நின்று காரிலேயே அவர் காத்திருந்தார். ஆயினும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முடியாத நிலையில் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டு அவர் திரும்பி சென்றார்.
தேசிய அளவில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக விசாரிப்பதற்காக 3 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. பஞ்சாப் அரசும் 2 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய பஞ்சாப் உள்துறை அமைச்சர், டிஜிபி உள்ளிட்டோரைப் பதவி நீக்கம் செய்யும்படி பாஜக கோரி வருகிறது.
நேற்று பிரதமர் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் தொடர்பாக பெரோஸ்பூர் மாவட்ட சிறப்பு எஸ்பி ஹர்மந்த்தீப் சிங் ஹன்ஸ் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நரேந்திரன் பார்கவ் புதிய சிறப்பு எஸ்பியாக அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.