டில்லி:
2011ம் ஆண்டு முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி 41,170 உறுதியளிப்பு கடிதங்களை (எல்ஒயு) வழங்கியுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஎன்பி விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் கடந்த 20ம் தேதி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ராஜ்யசபாவில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ‘‘2011ம் ஆண்டு முதல் 41,178 உறுதியளிப்பு கடிதங்களை பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்துள்ளது. இதில் 7,672 கடிதங்கள் 90 நாட்கள் செல்லத்தக்கதாகும். 20,078 கடிதங்கள் 180 நாட்கள் செல்லத்தக்கதாகும். 11,224 கடிதங்கள் 365 நாட்கள் செல்லத்தக்கதாகும்.
2,204 கடிதங்கள் 365 நாட்களுக்கு மேல் செல்லத்தக்கதாகும். இதர வங்கிகளின் வெளிநாட்டு கிளைகளில் இந்த உறுதியளிப்பு கடிதங்கள் மூலம் எடுக்கப்பட்ட பணம் எவ்வளவு என்ற விபரம் தற்போது இல்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று பிஎன்பி தெரிவித்துள்ளது’’ என்றார்.
உறுதியளிப்பு கடிதம் என்றால் என்ன?
ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு வங்கிகள் இந்த உறுதியளிப்பு கடிதத்தை (Letter of Undertaking) வழங்கும். இக்கடிதத்தை ஆதாரமாக வைத்து ஹாங்காங்கில் உள்ள அலாகாபாத் வங்கி, ஆக்சிஸ் வங்கிக் கிளைகள் கடன் வழங்கியுள்ளன.
எல்ஓயு எனப்படும் உறுதியளிப்பு கடிதம் இருந்தால் கடன் பெறுவோர் தொகையை திரும்ப அளிக்கவில்லை என்றால் கடன் மற்றும் அதற்குரிய வட்டியை பஞ்சாப் நேஷனல் வங்கி அளிக்கும் என்ற உத்திரவாதத்தை இந்த உறுதியளிப்பு கடிதம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]