சண்டிகர்
வன்கொடுமை சட்டத் திருத்தத்துக்கும் அதை எதிர்க்காத மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் வன்கொடுமை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது. இதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்துக்கு மறு சீராய்வு மனு அளித்துள்ளனர். மத்திய அரசு இது குறித்து எந்த ஒரு எதிர்ப்பும் இது வரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவையில் இது குறித்து காங்கிரஸ் உறுப்பினர் சுஷில் ரிங்கு ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது மத்திய அரசு இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சரியாக வாதாடவில்லை என கண்டனம் தெரிவித்தார். பஞ்சாப் மாநில தொழிற்கல்வி அமைச்சர் சரண்ஜித் சன்னி இந்த சட்டத்தினால் கடும் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆம் அத்மி கட்சியை சேர்ந்த உறுப்பினர் கன்வர் சந்து இந்த பிரச்னையை எழுப்புவதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய தொகை சம்பந்தமான விவகாரத்தை அரசு மறைப்பதாக குற்றம் சாட்டினார். அத்துடன் அரசு அளிக்க வேண்டிய பக்கித் தொகையான ரூ.300 கோடியை எப்போது அளிக்கும் என்பதை தெரிவித்து விட்டு இந்த பிரச்னையை பற்றி விவாதிக்க வேண்டும் எனக் கூறினார்.
இவ்வாறு ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் இடையில் பஞ்சாப் சட்டசபை தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில் சட்டத் திருத்தத்துக்கு எதிர்த்து மறு சீராய்வு மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசை இந்த தீர்மானத்தில் கண்டித்துள்ளது.