சண்டிகர்

விவசாயிகள் போராட்டத்தில் நேற்று உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்குப் பஞ்சாப் அரசு ரூ, 1 கோடி நிவாரணம் அளிக்கிறது.

கடந்த 13 ஆம் தேதி விவசாயிகள் டில்லியை நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தைத் தொடங்கினர்.அவர்கள்  பஞ்சாப்-அரியானா இடையிலான ஷாம்பு எல்லையிலும், கானாரி எல்லையிலும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன.

விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய 4-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, மத்திய அமைச்சர்கள் முன்வைத்த யோசனையைத் தொடர்ந்து, கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் போராட்டத்தை நிறுத்தி வைத்தனர்.

கடந்த 21-ந் தேதி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி பஞ்சாப்-அரியானா இடையிலான கானாரி எல்லையில் தடுப்புகளை நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன., விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் நடந்ததில்  சுப்கரன் சிங் என்ற 21 வயதான விவசாயி பலியானார்.

விவசாயிகள் சங்க தலைவர்கள் போராட்டத்தை 2 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவில் முடிவு செய்வதாகவும் அறிவித்தனர்.

போராட்டத்தின்போது பலியான விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண உதவியாக அளிக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அரசு பலியான விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.