நகோடர், பஞ்சாப்
பஞ்சாப் மாநில ஆசு விவசாயத் துறைக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரத்தை நிறுத்தாது என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயத்துறைக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. ஆழ்துளைக் கிணறுகளுக்கான மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளினால் பஞ்சாப் மாநில விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்தனர். நேற்று பஞ்சாப் மாநிலம் நகோடர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இரண்டாம் கட்ட கடன் நிவாரண பத்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் கலந்துக் கொண்டு 29192 விவசாயிகளுக்கு சுமார் ர்ரு.162.16 கோடி ரூபாய்க்கான கடன் நிவாரணப் பத்திரங்கள் வழங்கினார். அப்போது அவர், “பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயத்துறையில் உள்ள இடர்பாடுகளை நீக்க ஆவன செய்து வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வரும் போது கடன் தொல்லையால் ஒவ்வொரு கிராமத்திலும் பலர் தற்கொலை செய்துக் கொண்டனர். இப்போது தற்கொலைகள் குறைந்து விட்டன.
அனைத்து விவசாயிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நிவாரணம் அளிக்க திட்டம் தீட்டி உள்ளோம். அதற்கு தேவையான நிதி உதவிகளை அரசு வழங்க உள்ளது. சிரோன்மணி அகாலி தள் கட்சி ஆழ்துளை குழாய் கிணறுகளுக்கு இந்த அரசு மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க உள்ளதாக பொய் செய்தி பரப்பி வருகிறது. இந்த அரசு என்றைக்கும் விவசாயத் துறைக்கு அளித்து வரும் இலவச மின்சாரத்தை நிறுத்தாது.” என உரையாற்றினார்.