சண்டிகர்: கர்தார்பூர் வீடியோவை வெளியிட்ட பாகிஸ்தானுக்கு பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீக்கியர்களின் குரு, குருநானக் தமது வாழ்நாளில் 18 ஆண்டுகள் பாகிஸ்தானின் தற்போதைய நரோவால் என்ற மாவட்டத்தில் உள்ள கர்தார் பூரில் இருந்தார். ராவி நதிக்கரையோரம் உள்ள குருத்வாராவிற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.

அதற்காக, கர்தார்பூரையும், குருதாஸ்பூரில் உள்ள தேராபாபா நானக்கையும் இணைக்கும் கர்தார்பூர் வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை  பிரதமர் மோடி வரும் 8ம் தேதி திறக்கிறார். அதன் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  வரும் 9ம் தேதி வழியை திறப்பார்.

இந் நிலையில், குருத்வாராவிற்கு வருகை தரும் சீக்கியர்களை வரவேற்க  பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோ பாடல் சர்ச்சைக்கு வித்திட்டு இருக்கிறது.  பாடலில் பிந்ரன்வாலே உட்பட 3 காலிஸ்தான் பிரிவினைவாதிகள் படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த 3 பேரும் 1984ம் ஆண்டு ஜூன் மாதம் அமிர்தசரஸ் பொற்கோயிலில், ராணுவத்தின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரில் கொல்லப்பட்டவர்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங், பாகிஸ்தான் ராணுவ செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று எச்சரித்து இருக்கிறார்.

இந்த வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது, ஏதேனும் மறைமுக திட்டம் கட்டாயம் இருக்கும் என்பதால் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.