பஞ்சாப்:
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே ஓடும் ராவி ஆற்றில் ஆளில்லாத பாகிஸ்தானை சேர்ந்த படகு இன்று காலை மத்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது..
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரி எல்லை பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, இந்திய வீரர்கள் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் புகுந்து அடித்தனர். அங்கு முகாமிட்டிருந்த தீவிரவாதிகளை கொன்று குவித்தனர். இதில் ஒருசில பாகிஸ்தான் நாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையில் மோதல் வலுத்துவருவகிறது. போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பாகிஸ்தானை சேர்ந்த் தீவிரவாதிகள், இந்தியாவில் பெரும் தாக்குதல்களை நடத்த காத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 9 பேருடன் குஜராத் கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோரக் காவல் படையினர் மடக்கி சிறைபிடித்தனர். அதில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒன்பது பேர் இருந்தனர். அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இன்று காலை பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ராவி ஆற்றுப்பகுதியில் காக்கர் ரெய்னா என்ற இடத்தில் அதிகாலை படகு ஒன்று நிற்பதை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் அதை மடக்கினர். ஆனால், அந்த படகில் யாரும் இல்லாதது கண்டு திடுக்கிட்டனர். அந்த படகு பாகிஸ்தானை சேர்ந்தது என தெரிய வந்துளளது.
இந்த மரம் படகுமூலம் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த எவரேனும் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் எச்சரிக்கை அடைந்துள்ள எல்லை பாதுகாப்பு படையினர் ராவி ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.