விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை (MSP) உத்தரவாத சட்டம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக, விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் பந்த்க்கு மத, சமூக அமைப்புகள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட பிற அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கடைகள், பெட்ரோல் பங்குகள், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

52 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 22 ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன.

பஞ்சாப் – ஹரியானா இடையிலான பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.

இன்று காலை 7 மணிக்கு துவங்கிய இந்த பந்த் காரணமாக பஞ்சாபில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும்பனி பொழிவையும் பொருட்படுத்தாமல், அமிர்தசரஸ்-டெல்லி மற்றும் ஜலந்தர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவசரகால சேவைகளில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை மற்றும் நிர்வாகத்தினர் உஷார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.