சென்னை:

ஓட்டு போட பணம் வாங்கிய வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய தேர்தல் ஆணையம் மீது பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அருண் நடராஜன் என்பவர் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர் ந்துள்ளார். இந்த வழக்கில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம் ஆஜராயினார்.

அவர் வாதாடுக¬யில், ‘‘லஞ்சம் வாங்குவதும் குற்றம். லஞ்சம் கொடுப்பதும் குற்றமாகும். சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மொத்தம் உள்ள 2.4 லட்சம் தகுதி பெற்ற வாக்காளர்களில் குறைந்த பட்சம் 2 லட்சம் வாக்காளர்கள் தலா ரூ. 4 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு இடைத்தேர்தலை ரத்து செய்தது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்களை மட்டுமே குறிப்பிடப்பட் டுள்ளது. அதே சமயம் பணம் பெற்ற வாக்காளர்கள் குறித்து பேசவில்லை. அவர்களுக்கும் இந்த குற்றத்தில் சம பங்கு உள்ளது. சில புகார்களில் சேலைகள், பணம், வீட்டு உபயோக பொருட்கள் விநியோகம் செய்த வீட்டு எண்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், புகாரில் வாக்காளர் ஒருவரது பெயர் கூட குறிப்பிடப்படவில்லை. தேர்தல் ஆணையும், அவர்களது கள குழுவினர், பறக்கும் படையினருக்கு பணம் பெற்ற வாக்காளர்களின் அடையாளம் தெரியும். ஆனால், அவர்கள் மீது எவ்வித லஞ்ச குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படவில்லை.

தேர்தல் ஆணையம் குறை ந்தபட்சம் 10 ஆயிரம் வாக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். இதன் மூலம் அரசியலமைப்பு கட்டமைப்பான தேர்தல் ஆணையம் சட்டத்தை புறக்கணித்துள்ளது. தனது கடமையை ஆற்ற கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை தேர்தல் ஆணையம் தவறவிட்டுவிட்டது’’ என்றார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் கூறுகையில், ‘‘ மனுதாரர் ஏன் போலீசில் புகார் அளிக்கவில்லை. அதை யார் தடுத்தது’’ என்றனர்.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான நிரஞ்சன் ராஜகோபால் கூறுகையில், ‘‘அரசியலமைப்பு கட்டமைப்பான தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டிய பொறுப்பும், வேட்ப £ளர்களை தேர்தல் நேரத்தில் கண்காணிக்கும் பணியை மேற்கொள்கிறது.

பணம் பெற்றது தொடர்பாக 2 லட்சம் வாக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. இதில் வாக்காளர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது. பணம் வாங்கியவர்கள் வாக்களிக்க வருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நளினி சிதம்பரம் ‘‘ அப்படி என்றால் வாக்காளர்கள் ஓட்டுபோட பணம் வாங்குவது தவறில்லை என்று உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டியது தானே’’ என்றார்.