சென்னை: அதிமுக ஆட்சியில் புளியந்தோப்பு கே.பி பூங்கா அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான விவகாரம் குறித்து ஆய்வு செய்த ஐஐடி குழுவினர்.,  கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.

சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் அதிமுக ஆட்சி காலத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு  கட்டப்பட்டது. சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த  864 வீடுகள் இருக்கின்றன. கொரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது, இது கொரோனா மருத்துவமனையாகவும், கொரோனா நோயாளிகள் தங்க வைக்கும் இடமாகவும் செயல்பட்டது. பின்னர் கொரோனா குறையத்தொடங்கியதும், அங்கிருந்த வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டு பயனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இங்கு குடிவந்த பயனர்கள்   கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வதாகவும், கட்டுமானம் சரியில்லை என்றும் குற்றம் சாட்டினர். இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விவகாரம் குறித்து,  சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேறியது. அப்போதைய அமைச்சர் ஓபிஎஸ் உள்பட பலர்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. தொடர்ந்து, கட்டிப்பணியின்போது கவனக்குறைவாக இருந்த குற்றசாட்டில் குடுசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, கட்டிடத்தின் தரத்தை ஐஐடி சிறப்பு குழு அமைத்து தமிழகஅரசு உத்தரவிட்டது. ஐ.ஐ.டி. தலைமை செயற்பொறியாளர் பத்மநாபன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கட்டிடப்பகுதிகளுக்கு சென்று பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தினர்.  கட்டுமானம் தரமில்லாமல் உள்ளதா? குடியிருப்பின் பாகங்கள் இடிந்து விழ காரணம் என்ன? என்பது குறித்த பலக்கட்ட ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து இன்று ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். அதில், குடியிருப்பு தரமற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டிடங்களை கட்டிடங்களை பிஎஸ்டி கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.