புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. வன்னியன் விடுதி பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி யில், காளைகளின் கொம்புகள் மாடுபிடி வீரர்களை பதம்பார்ககாத வகையில், கொம்புகளில் ரப்பர் குப்பிகள் கொருத்தப்பட்டு களமிறக்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகடள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் வெகுவிமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் அருகே உள்ள வடமலாப்பூர் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி இன்று காலை ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக பிடாரி அம்மன் கோயில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 700 காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுற்று சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். பின்னர் வாடிவாசலில் இருந்து முதல் காளையாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள், வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குத்துவிளக்கு, சேர், பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியை திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த திரளான மக்கள் கலந்து கொண்டு ரசித்தனர். பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
அதுபோல, வன்னியர்விடுதி பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொருத்தி காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது, சில மாடுகளின் ஆவேச தாக்குதலால் பலர் காயமடைவதும், சிலர் இறந்துவிடும் சோகமும் நிகழ்ந்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையிலும், மாடுபிடி வீரர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொருத்தப்படுகின்றன. இதுபோன்ற மற்ற இடங்களில் நடைபெற உள்ள போட்டிகளிலும் காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு மாடுபிடி வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.