அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோவில், வீராம்பட்டினம், புதுச்சேரி
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ பக்தி கொண்டவர். ஒரு நாள் காலை இவர் தன் தோளில் மீன்பிடிக்கும் வலையைச் சுமந்து, ஊருக்கு மேற்கேயுள்ள செங்கழுநீர் ஓடைக்குச் சென்று மீன் பிடிப்பதற்காக வலையை வீசினார்.
காலையிலிருந்து வலை வீசி ஒரு மீன் கூட கிடைக்காததால் வீரராகவர் கவலைப்பட்டார். கடைசி முறையாக ஓடையில் வலைவீசி இழுத்த போது, வலை கனமாக இருப்பதைக் கண்டார். வலை கனமாக இருப்பதால் சிக்கியிருப்பது மீன்தான் என்று நினைத்து சந்தோஷத்துடன் இழுத்துக்கொண்டே வந்தார். ஆனால் சிக்கியிருந்தது மீனுக்குப் பதில் உருண்டையான மரக்கட்டை. ஆண்டவன் இன்று நமக்கு அளித்த படி இது தான் என்று நினைத்தபடி இந்த மரக்கட்டையை வீட்டிற்கு எடுத்துச் சென்று கொல்லைப்புறத்தில் போட்டார்.
சில நாட்களுக்குப்பின் அடுப்பு எரிப்பதற்காக விறகு இல்லாமல் போகவே வீரராகவரின் மனைவி வீட்டின் பின் புறத்தில் இருந்த மரக்கட்டையை உடைத்து உபயோகிக்கக் கோடாரியால் மரத்தைப் பிளக்க முயன்றார். மரத்துண்டின் மீது கோடாரி பட்டதும் மரக்கட்டை பிளக்கவில்லை. அதற்குப்பதில் கோடாரி பட்ட இடத்திலிருந்து ரத்தம் பெருகியது. இதனால் வீரராகவரின் மனைவி பதறிப்போனார். இந்த செய்தியறிந்த அந்த ஊர் மக்கள் இந்த அதிசயத்தை வந்து கண்டனர். தகவலறிந்து வந்த வீரராகவரும் அந்த மரக்கட்டையை வீட்டினுள் எடுத்து வந்து சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்தார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் வீரராகவரின் வாழ்க்கை வளமையானது.
ஒரு நாளிரவு வீரராகவர் கனவு ஒன்று கண்டார். அந்த கனவில் அம்மன் தோன்றி அவரிடம் பக்தனே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெய்வீகம் பெற்ற ரேணுகை தான் நான். நான் அன்னை பராசக்தியின் அம்சம். இந்த பகுதி மக்கள் செய்த தவத்தின் பயனாக இங்கு கோயில் கொண்டு அருள் வழங்க வந்துள்ளேன். என் வருகையின் அடையாளமே, உன்னிடம் உள்ள மரத்துண்டு. எனவே நான் குறிப்பிடும் இடத்தில் அந்த மரத்துண்டை பீடமாக ஸ்தாபித்து, அதன் மேல் என் திருவுருவை விக்ரகமாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா. என் திருமேனியைப் பிரதிஷ்டை செய்ய நான் குறிப்பிடும் இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்து மறைந்த சித்தர் பீடம் ஒன்று உண்டு, அதுவே எனக்கேற்ற இடம், மேலும் என்னை செங்கழுநீர் அம்மன் என்று அழையுங்கள் என்று கூறி விட்டு அன்னை ரேணுகை மறைந்தாள்.
மறுநாள் வீரராகவர் தான் கண்ட கனவை ஊர் மக்களிடம் கூறினார். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி அம்மன் குறிப்பிட்ட இடத்தை தேடினர். அப்போது புதர் அடர்ந்த, பாம்பின் புற்று வளர்ந்தோங்கிய இடம் ஒன்றைக் கண்டனர். ஊர்மக்களின் சத்தத்தால் புற்றிலிருந்து மிகப்பெரிய பாம்பு ஒன்று வெளிவந்தது. அது தனது படத்தால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியை மூன்று தடவை அடித்து, விக்ரக பிரதிஷ்டை இடத்தை காண்பித்து விட்டு புற்றுக்குள் சென்று மறைந்தது. நாகம் குறிப்பிட்ட இடத்தை தோண்டி சுத்தம் செய்தனர். பின்பு வீரராகவர் வீட்டில் இருந்த மரத்துண்டைப் பீடமாக அமைத்தனர். அதன் மேல் கழுத்துக்கு மேல் உள்ள அம்மனை எழுந்தருளச் செய்து, அதற்குச் செங்கழுநீர் அம்மன் என்ற திருநாமம் இட்டனர்.
இங்கு தேர்த்திருவிழாவைப் புதுச்சேரி ஆளுநர் தேர் வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கிவைப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. இந்த செங்கழுநீர் அம்மனை பரதவர் இனமே வணங்கி வழிபட்டு மகிழ்ந்தது. பின்னர், தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட முழு உருவம் அமைக்கப்பட்டது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்திலுள்ள பல பரம்பரைகள் செங்கழுநீர் அம்மனை தங்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.