புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபைக்குள் சபாநாயகரின் உத்தரவை மீறி  நுழைய முயன்று தடுத்து நிறுத்தப்பட்ட  நியமன பாஜக எம்எல்ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜகவை சேர்ந்த 3 பேரை ஆளுநர் கிரண்பேடி நியமன சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர்களை எம்எல்ஏக்களாக ஏற்க சட்டமன்ற  சபாநாயகர் வைத்திலிங்கம், மறுத்துவிட்ட நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவர்களின் நியமனம் செல்லும் என உயர்நீதி மன்றம் தீர்ப்பு கூறியது.

இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரி கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகரை சந்தித்த வேண்டுகோள் விடுத்தபோது,  உயர்நீதி மன்ற உத்தரவு  குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்னரே, அவர்களை சட்டசபைக்குள் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்த  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று  புதுச்சேரி சட்டசபை கூட்டம் ஆளுநர் கிரண்பேடியின் உரையுடன் கூடியது. அப்போது நியமன பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரும் சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து சபைக்கு வெளியே அமர்ந்து,  நியமன பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரும் அரசுக்கும், சபாநாயகருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வநதனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.