புதுச்சேரி:
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் 11 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி உள்பட நாடு முழுவதும் பல மாநிலங்களில் காலியாக உள்ள ஏராளமான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளுக்கு அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களை பெற்று வரும் நிலையில், புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட இதுவரை 11 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துருள்ளதாகவும், வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தான் டில்லி சென்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் நாளை (25ந்தேதி) வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதே வேளையில் புதுச்சேரியில் பாஜக சார்பில் 6 பேர் விருப்ப மனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.