புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வாக்களிக்க குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டமாக செல்ல தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போல் புதுச்சேரி மாநிலத்திலும் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் தேர்தல் நேர அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 7 ஆம் தேதி காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
புதுவை மாநில மார்க்சிஸ்ட் கட்சி செயலர் ராஜாங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் நேரத்தில் மக்கள் வாக்குப்பதிவைத் தேவையான ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் உத்தரவு ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதையொட்டி மாவட்ட ஆட்சியர், “புதுச்சேரியில் வாக்களிக்கச் செல்வோர் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சேர்ந்து சென்று வாக்களிக்க எவ்வித தடையும் இல்லை. 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை எவ்விதத்திலும் பாதிக்காது.
அத்துடன் இந்த தடை உத்தரவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சிறிதும் பாதிக்காது. வரும் 6 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவின் போது சட்டவிரோதமாக ஆட்கள் கூட வாய்ப்புள்ளது. அதைத் தடுக்கவே புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என நீதிமன்றத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.