புதுச்சேரி.

புதுச்சேரி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது,  அப்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இன்று காலை 9.30 மணி அளவில் சட்டசபை கூட்டம் தொடங்கியது. சபை கூட்டம் தொடங்கியதும் முதல்வர் நாராயணசாமி 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.

அப்போது, அதிமுக, என்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுகவினர் கூச்சலிட்டு வருகின்றனர். கடந்தாண்டு நிதியை காங்கிரஸ் சரியாக பயன்படுத்தவில்லை என புகார் கூறி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி சட்டசபையில்  பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 16-ம் தேதி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, 17-ம் தேதி ஜிஎஸ்டி சட்ட முன்வடிவு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தின்போது, என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் அனந்த், ஆளுநர் கிரண் பேடியை மிகவும் புகழ்ந்து பேசினார். இதன் காரணமாக நேற்றும் சட்டப் பேரவையில் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில் 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி  இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் பேனர்களை ஏந்தி சபாநாயக்ர் இருக்கையை முற்றுகையிட்டனர். பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும் அமளியில் ஈடுபட்டார்.

ஆனாலும் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் உரையை வாசித்ததால் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.