புதுச்சேரி:
திமுக தலைவரும், முதுபெரும் தலைவருமான கருணாநிதியின் 95வது பிறந்தநாள் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. அவருக்கு இன்று கூடிய புதுச்சேரி சட்டசபை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கை நகல்களை முதல்வர் நாராயணசாமி சபையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.
அதையடுத்து, புதுவை சட்டசபை சபாநாயகர் திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவிக்கும் வகையில் பேசினார்.
அப்போது, 1955-ம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினராக தொடர்ந்து கலைஞர் கருணாநிதி பதவி வகித்து வருகிறார். 1967-ம் ஆண்டு முதல்முறையாக முதல்-அமைச்சராகவும் ஆனார். 5 முறை கலைஞர் தமிழக முதல்-அமைச்சராக இருந்துள்ளார். தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் பல்வேறு வகைகளில் பாடுபட்டுள்ளார். 95-வது பிறந்தநாளை கொண்டாடும் தலைவர் கலைஞருக்கு புதுவை சட்டசபை தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது என கூறினார்.
தொடர்ந்து, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவா பேசினார். அவர், எங்கள் தலைவர் கலைஞருக்கு புதுவை சட்டசபை வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மேலும், கருணாநிதி,. தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் இறுதி மூச்சுவரை போராடுபவர். எங்கள் தலைவர் 13-வது முறை சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து வருகிறார். எழுத்தாற்றல், பேச்சாற்றால், அரசியல், திரைத்துறை என அனைத்து துறையிலும் தனி முத்திரை பதித்தவர். உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவராக திகழ்பவர் கலைஞர். 63 ஆண்டுகளாக தமிழக அரசியலில் கோலோச்சி வருபவர். இத்தகைய தலைவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில்கூட பார்க்க முடியாது. அவருக்கு சட்டசபை வாழ்த்து தெரிவித்ததற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இறுதியில் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, 5 முறை தமிழக முதல்-அமைச்சராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நீண்ட பல ஆண்டாக தி.மு.க. தலைவராகவும் பதவி வகித்து வருபவர் கலைஞர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர், நாட்டின் பிரதமர்களை உருவாக்கியவர். 95-வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு புதுவை மக்களின் சார்பில் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.