புதுச்சேரி,

ட்டமன்றத்துக்கு பூட்டு போட்டு புதுமையான வகையில் புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.

பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச பொங்கல் பொருட்கள் புதுச்சேரியில் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் மாதந்தோறும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி வீநியோகமும் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரி  அ.தி.மு.க  சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள்,  சட்டமன்றத்தின் வாயிலை இழுத்துமூடி பூட்டுப்போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சட்டசபை வளாகம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த  சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி அதிமுக எம்எல்ஏக்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, அரசின் கோப்புகளுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்றும், நாளைக்கே ஒப்புதல் அளித்தால் உடனே பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறினார்.

ஆனால், அமைச்சரின் பேச்சை ஏற்க மறுத்து, ‘ஆளுநர் உடனே ஒப்புதல் அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்’ என்று கூறி, சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து புதுச்சேரி சபாநாயகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன்,   ‘ஆளுநர் ஆட்சியாளர்கள் மோதலால் மாநிலத்தில் எந்தத் திட்டமும் நடைபெறவில்லை. மாநில வளர்ச்சி முற்றிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே கடநத  தீபாவளியின்போது வழங்கவேண்டிய இலவச சர்க்கரை இன்னமும் வழங்கப்படவில்லை என்ற அவர், மாதந்தோறும் வழங்கவேண்டிய இலவச அரிசியும் வழங்கப்படவில்லை என்றும்,மக்கள் எங்களை கேள்வி கேட்பதால், நாடக்ள்  போராட்டம் நடத்தவேண்டியுள்ளது என்று கூறினார். மேலும், அரசின் கோப்புகளுக்கு   ஆளுநர் கிரண்பேடி உடனே அனுமதியளிக்க வேண்டும்’ என்றும் கூறினார்.

அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் குறித்து அறிந்த முதல்வர் நாராயணசாமி சம்பவ இடத்துக்கு வந்து அன்பழகனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது,   ‘எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வெளிப்படையாக நிர்வாகம் செய்கிறோம். உங்களைவிட மக்கள்மீது எங்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. இங்கு வந்து ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள் ? இதற்கு நாங்களா காரணம்? என்று கேள்வி எழுப்பிய முதல்வர்,

இலவச அரிசி, பொங்கல் பொருள்கள் வழங்குவதற்கான கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பிவிட்டோம். ஒப்புதல் தர வேண்டியது ஆளுநர்தான். விரைவில் அனுமதி கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அவையில் இருந்து வெளியே வந்த  சபாநாயகர் வைத்திலிங்கம், அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தி தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.

இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் நடைபெற்று வந்த போராட்டமும், பரபரப்பும் முடிவுக்கு வந்தது.