புதுச்சேரி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் புதுச்சேரி அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில், வடமாநில விவசாயிகள் 50 நாட்களை கடந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரையில் போராட்டம் நடைபெறும் என அறிவித்து உள்ளனர். இதற்கிடையில், மத்தியஅரசு விவசாய அமைப்புகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுடம் உடன்பாடு எட்டவில்லை.
இநத் நிலையில், வரும் 26ந்தேதி இந்திய குடியரசுத் தினத்தன்று, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி மாநில விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், சமூக நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி ஆகியோர் போராட்டக்களத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தியதுடன், அவர்களுக்கு தங்களது ஆதரவையும், மாநில காங்கிரஸ் அரசின் ஆதரவையும் தெரிவித்தனர்.