சென்னை: டாஸ்மாக் கடைகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கூறும் ஆட்சேபங்களை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய தகவல்களை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவ்வப்போது மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள், கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம், இரு வேறு உத்தரவு களை பிறப்பித்தது. மேலும், டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணை பரிந்துரைக்கப்பட்டது.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, டாஸ்மாக் கடைகள் தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகளும், கிராம சபைகளும் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக விதிகளில் திருத்தம் கொண்டுவருவது பற்றி அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், டாஸ்மாக் கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறி, திருத்த விதிகளை தாக்கல் செய்தார். அதன்படி,
பொதுமக்கள் கூறும் ஆட்சேபங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்காமல் எந்த கடைகளையும் திறக்க அனுமதிக்க கூடாது என்றும் அந்த திருத்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல் முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்குகளை மீண்டும் சம்பந்தப்பட்ட அமர்வுகளுக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், முழு அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கேள்வியை முடித்து வைத்தனர்.