மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்த 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகவும் தூய்மையான நகரம் என்ற பட்டியலில் கடந்த எட்டு ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வரும் நகரில் இது போன்ற ஒரு பொதுசுகாதார சீர்கேடு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோர் நகரின் பகீரத்புரா பகுதியில், டிசம்பர் 26 அன்று, பல ஆண்டுகள் பழமையான நர்மதா குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பே இந்த பேரழிவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. பொது கழிப்பிடம் கட்டப்பட்ட இடத்தில் இருந்த குழாய் உடைந்து, கழிவுநீர் குடிநீருடன் கலந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் ஏற்பட்ட பெரும் சுகாதார பேரழிவில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் அதிகமானோர் கடும் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகீரத்புரா பகுதியில் இருந்து டிசம்பர் 29 முதல் 31 வரை மூன்று நாட்கள் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, MGM மருத்துவக் கல்லூரியில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

அதில், மனித கழிவுகளில் காணப்படும் E. coli மற்றும் Shigella போன்ற உயிருக்கு ஆபத்தான பாக்டீரியாக்கள் குடிநீரில் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து பகீரத்புராவில் உள்ள 1,714 வீடுகளில் சுகாதார ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

8,571 பேர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர், 388 பேருக்கு லேசான வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்ததால் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது

இதுவரை 272 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது 201 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர், இதில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது

மத்திய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, நான்கு பேர் குடும்பங்களுக்கு நேரில் சென்று ரூ. 2 லட்சம் காசோலை வழங்கினார்

“இது அதிகாரிகளின் கடும் அலட்சியத்தால் ஏற்பட்ட சம்பவம்” என்று மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா ஒப்புக்கொண்டுள்ளார்.

“பகீரத்புராவில் உள்ள முழு குடிநீர் குழாய் வலையையும் ஆய்வு செய்து வருகிறோம்” என்று மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் துபே தெரிவித்துள்ளார்.

பகுதியில் சுத்தமான குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில், புதிய நிலையான செயல்முறை விதிகள் (SOP) விரைவில் அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]