திருத்தணி

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அரசுப் பேருந்தை திருத்தணி மக்கள் சிறை பிடித்து மறியல் செய்துள்ளனர்.

சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட முருகூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திருத்தணிக்குப் பேருந்தில் சென்று படிக்கும் சூழல் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்ல பேருந்தைத்தான் நம்பி உள்ளனர்.

கடந்த சில நாட்களாகப் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் முருகூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்றிருந்தபோது அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

எனவே ஆத்திரம் அடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக வந்த அரசு பேருந்தைச் சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

இதை அறிந்து திருத்தணி போக்குவரத்து பணிமனை மேலாளர் அரிபாபு மற்றும் காவலர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வரும் காலங்களில்  இந்த வழித்தடத்தில் வரும் அரசு பேருந்துகள் முருகூர் நிறுத்தத்தில் நின்று செல்லும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.