அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள ஆய்வகத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. வீடுகளில் கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றை மூடி வைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

செம்முகக் குரங்கு (ரீசஸ் மக்காக்) இன குரங்குகளை கொண்டு அங்குள்ள ஆல்பா ஜெனிசிஸ் ((Alpha Genesis))நிறுவனம் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த ஆய்வகத்தில் உள்ள குரங்குகளில் 50 குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டை அதன் பராமரிப்பாளர் கவனக்குறைவாக திறந்தநிலையில் விட்டுள்ளார். அதை பயன்படுத்திக் கொண்டு 43 குரங்குகள் அங்கிருந்து தப்பியுள்ளன. 7 குரங்குகள் கூண்டிலேயே இருந்துள்ளன.

ஆய்வகத்தில் இருந்து தப்பிய குரங்குகள் அனைத்தும் பெண் இனத்தை சேர்ந்தவை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது அனைத்தும் 3.2 கிலோ எடை கொண்டவை என்றும் தப்பிய குரங்குகளை வைத்து எந்தவித நோய் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு, தெர்மல் கமரா, கூண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி கடந்த புதன்கிழமை அன்று ஆய்வகத்தில் இருந்து தப்பிய குரங்குகளை தேடிப் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

மழை காரணமாக குரங்குகளை பிடிப்பது சவாலாக உள்ளது என்றும் தப்பிய குரங்குகள் அனைத்தையும் பிடித்துவிடுவோம் என்றும் ஆல்பா ஜெனிசிஸ் நிக்ருவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2016-ல் 19 குரங்குகள், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 26 குரங்குகள் ஆய்வகத்தில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.