சென்னை: பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பிரபல யுடியூபராக பப்ஜி மதம் இளைஞர் சமுதாயத்தினரிடையே மிகவும் பிரபலம். மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் நடத்தி வரு கிறார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இதன்மூலம் ஏராளமான பணம் சம்பாதித்து செழுமையாக வாழ்ந்து வந்தார்.
இவர் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக சிலர் கொடுத்த புகாரின் பேரில், பப்ஜி மதனை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த ஆண்டு (2021) ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார். அவருக்கு ஜாமின் கொடுக்க முடியாதபடி காவல்துறையினர் தடங்கலை ஏற்படுத்தி வந்தனர். இந்த நிலையில், தன்மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனு தாக்கல் செய்தார். ஆனால்,மனு மீது உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அரசின் கடுமையான எதிர்ப்பால் மறுப்பு தெரிவித்தது.
இந்த பப்ஜி மதன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ,பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் தமிழகஅரசுக்கு எதிராக செயல்படுபவர்களை கைது செய்யும் காவல்துறை அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை ஏவி வருகிறது. ஆனால், குண்டர் சட்டத்தை நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.