தமிழ்நாட்டில் உள்ள பல சுங்கச் சாவடிகளில் காலாவதியான நிலையில் தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹருல்லா தலைமையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி என ஏழு சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 70 சுங்கச் சாவடிகளில் பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, பள்ளிகொண்டா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் சாலை அமைக்க செலவிட்ட முதலீட்டை வசூல் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் தொடர்ந்து சுங்கம் வசூலித்து வருவதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினர் குரல் எழுப்பி வந்த நிலையில் இன்று மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்பாட்டத்தின் போது பரனூர் சுங்கச்சாவடி மையத்தின் கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வழியாக சென்ற வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்காமல் அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோல் திருச்சி – தஞ்சை இடையே துவாக்குடியிலும் ஆர்பாட்டக்காரர்கள் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர்.

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் நாள்தோறும் ரூபாய் 50 கோடி சுங்க கட்டணமாக வசூல் செய்யப்படுவதாகவும். ஆண்டிற்கு 18 ஆயிரம் கோடி தமிழக மக்களுடைய பணம் சுங்கச் சாவடிகளில் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

‘சாலை அமைக்கச் செலவிட்ட முதலீட்டுக் கட்டணத்தை
வசூல் செய்துவிட்ட டோல்கேட்களில் கட்டணம் 60%
குறைக்கப்படும்’ என்ற விதியை சுட்டிக்காட்டி ‘இதுபோன்ற டோல்கேட்களில் இனி 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்’ என்று அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார்.

ஆனால், “தமிழ்நாட்டில் எந்த ஒரு டோல்கேட்டிலும் கட்டணம் குறைக்கப்படாது” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு மனித நேய மக்கள் கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.