டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி 70வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அமைப்பினர், வரும் 6ந்தேதி நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் 3 மணி நேரத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவித்து உள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், முடிவு எட்டப்படவில்லை. இதன் காரணமாக, விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், வருகிற 6-ந்தேதி நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு அருகேயுள்ள பகுதிகளில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும், அதிகாரிகளின் அத்துமீறல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சாலை மறியல் போராட்டம் நடத்துவார்கள் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சாலை மறியல் போராட்டம், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த மறியல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.