ஜெய்ப்பூர்: சிக்கன் பிரியாணி, முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் கொட்டைகளை உண்பதன் மூலம், நாட்டில் பறவைக் காய்ச்சலைப் பரப்பி வருகிறார்கள் போராடும் விவசாயிகள் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார் ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா தலைவர்களுள் ஒருவரான மதன் திலாவார்.
அவர், அம்மாநில பாஜக பொதுச் செயலாளராக உள்ளார் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
அவர் கூறியுள்ளதாவது, “டெல்லியில் விவசாயிகள் என்ற போர்வையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு, இந்த நாட்டைப் பற்றி கவலையில்லை. அவர்கள், போராட்டம் என்ற பெயரில் பிக்னிக் அனுபவிக்கிறார்கள்.
சிக்கன் பிரியாணி, முந்திரிக் கொட்டை, பாதாம் கொட்டை ஆகியவற்றை உட்கொண்டு, மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கிறார்கள்.
அந்தப் போராட்டத்தில், தீவிரவாதிகள், திருடர்கள் மற்றும் விவசாயிகளின் எதிரிகள் ஆகியோர் ஒளிந்திருக்கலாம். சிக்கன் பிரியாணியை உண்டு, அதன்மூலம் நாட்டில் பறவைக் காய்ச்சலைப் பரப்பிவிடும் ஒரு சதித்திட்டம் அப்போராட்டத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே, இதைக் களைய அரசு முயற்சிக்க வேண்டும்” என்று வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார் அந்த பிரமுகர்.