டெல்லி: மத்தியஅரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி வட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் நடத்தி வரும் போராட்டம் இன்று 57வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், இன்று மத்தியஅரசு, விவசாயிகள் இடையே 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி,
1) விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020′ (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020).
2) வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020!
3) ‘அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020’ (Essential Commodities (Amendment) Act 2020) சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்றுள்ளன.
இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்க எதிரான என கூறி, வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது 57வது நாளை எட்டி உள்ளது.
இதற்கிடையில், வேளாண் சட்டங்களை அமல்படுத்த தடைவிதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம் வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது, மேலும், இந்த சட்டம் குறித்து ஆராய, 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் இருந்து ஒருவர் விலகி உள்ள நிலையில் 3பேர் கொண்ட குழு விவசாயிகளை சந்திக்க முடிவு செய்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் அமைத்த குழுவினரை ஏற்க விவசாயிகள் மறுத்து விட்டனர். இது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதற்கிடையில், மத்தியஅரசும் விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை 9 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், அனைத்தும் தோல்வியாகவே முடிந்துள்ளது.
இந்த நிலையில், இன்று (20ந்தேதி) 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதற்கிடையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.