திருவனந்தபுரம்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரளாவில் பொது இடங்களில் போராட்டம் நடத்த ஆகஸ்டு 31ம் தேதி வரை தடை விதித்து கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கொரொனா பாதிப்பு தொடக்க காலத்தில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் பின்னர் நிலைமை மாறியது. 2 மாதங்களாக கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக அம் மாநில உயர் நீதிமன்றத்தில் குற்றசாட்டு எழுந்து வந்தது. அதையடுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். மணிகுமார், நீதிபதி ஷாஜி பி சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 15ம் தேதி, கேரளாவில் ஜூலை 31ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது.
இந் நிலையில், தொற்றுநோய் மற்றும் மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் பொது இடங்களில் நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் வரும் 31ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.